கடமலைக்குண்டு அருகே பட்டாளம்மன் கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு பட்டாளம்மன் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த மூன்று நாட்களாக மிகவும் பிரம்மாண்டமாகவும், பக்தி சிரத்தையுடனும் நடைபெற்றது.
கோலாகலமாகத் துவங்கிய திருவிழா: அம்மன் கரகம் எடுத்தல்
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் முதல் நாள் நிகழ்வாக, மேள தாளங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன் அம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாட்டைத் தொடங்கினர்.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
விழாவின் இரண்டாம் நாளில் பக்தர்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், அக்கினி சட்டி ஏந்துதல், மற்றும் புனித நீர் எடுத்து வருதல் போன்ற வழிபாடுகளைச் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர் திருவிழா நடைபெற்ற மூன்று நாட்களும் பட்டாளம்மனுக்கும், கருப்பசாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனர்.
கிராம வீதிகளில் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்
திருவிழாவின் மிக முக்கிய அம்சமாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த முளைப்பாரி ஊர்வலமானது, தங்கம்மாள்புரம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தேனி - வருசநாடு சாலையைக் கடந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தின் போது, திருவிழா மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாரம்பரிய இசபாட்டுகளுக்கு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளா காட்சியைப் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.
வைகை ஆற்றில் முளைப்பாரி கரைப்புடன் நிறைவுற்ற விழா
விழாவின் இறுதி நாளான மூன்றாம் நாள், பல நாட்கள் விரதமிருந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளைப் பக்தர்கள் தங்களது தலைகளில் சுமந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், பக்தி கோஷங்கள் முழங்க வைகை ஆற்றங்கரையில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன.
இந்த வைகாசி பொங்கல் திருவிழாவில் தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, ஆண்டிபட்டி, தேனி மற்றும் வருசநாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து, பட்டாளம்மன் மற்றும் கருப்பசாமியின் அருளைப் பெற்றுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், விழா கமிட்டியினரும் சிறப்பாகச் செய்திருந்தனர்.





